மலைபடு கடாம்
பத்துப் பாட்டினுள் ஒரு முத்துமணிக் கோவை
புத்தம் புதிதாய் புகன்றிடும் ஞானவொளி
பெருங்குன்றூர் ஈன்றெடுத்த பெருங்கவு சிகனாரால்
இகழ்ந்தோர் தம்மை சிறையில் அடைத்தவன்
புகழ்ந்த புலவோருக்கு நாட்டை ஈந்தவன்
நன்னன் என்ற நல்ல ஈகையாளன்
தனக்கென்று எதையும் தன்னில் கொள்ளான்
பாணரின் பாடலுக்குத் தேர்களை வழங்கிய
நன்னன் நற்செயல்கள் நல்கும் பாங்குடையவன்
பாணர்கள் நன்னனின் புகழைப் பாடி
பயனுறும் பரிசில்கள் அளவிறந் தனவே
காற்றினில் வருமே குயிலின் கீதமும்
ஆற்றிடை நீரும் மயிலின் அகவலும்
ஏற்றியேப் பாடும் பாணர்கள் பாடலும்
சாற்றிடும் நன்னன் சிறப்பை நாளுமே
ஈந்திடும் கொடையால் ஈடில்லா புகழால்
பெற்றனன் நன்னன் பெறற்கரும் பேறே.
மொட்டவிழ் மலரும் மானின் துள்ளலும்
மலையெங்கும் கேட்கும் பறையின் ஒலியும்
வான் அரமகளிர் அருவியாடும் ஒலியும்
கானகத்தில் மரங்கள் இசைத்திடும் களிப்பினொலியும்
மலரும் மலரின் மணமாக வீசும்
மன்னன் என்னும் நன்னனின் புகழே
பிறப்பில் சிறக்குமோர் பேரருள் அடைந்தான்
சிறந்து மாரியாய் மக்களைக் காத்தான்
நாட்டின் இயல்பும் நன்னன் புகழும்
ஏட்டில் எழுதி போற்றியது சிறப்பே
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக