திங்கள், 30 மார்ச், 2015

1999 சோதனை குழாய் குழவி

சோதனைக் குழாய் குழவி
இருண்டு கிடந்த
என் வாழ்வில்
ஒளி ஏற்றியது
சோதனைக்குழாய் குழவி
அதன் அழகில்
சொக்கிப்போனது
என் உலகம் நிஜம்தான்
பிறிதொரு நாளில்
மருத்துவ மனையின்
முறை கேடு படித்த நான்
டி என் . ஏ
சோதனை செய்ததில்
வேதனை விளைந்தது
ஆம் கணவனின் ஜீ னோடு
குழந்தையின் ஜீ ன் சேரவில்லை
இப்பொழுதெல்லாம்
குழந்தையின் சிரிப்பை
ரசிக்கமுடியவில்லை
அறிவை வியக்க முடியவில்லை
உறுத்தலாகவே உள்ளது
உறவினர்களால்
ஏற்படும் அவமானம் கருதி
உள்ளுக்குள்ளேயே
எரிந்து எரிந்து
சாம்பலாகிறது மனம்
வெளியே சொல்லமுடியாமல்
பறந்து பறந்து
பணம் தேடி
பாவக்குளத்தில் நீராடி
சகோதர உறவையே
கொச்சைபடுத்தி
வரமாக கிடைத்த
விஞ்ஞான வளர்ச்சியை
சாபமாக்காதீர்
மருத்துவர்களே

ஞாயிறு, 29 மார்ச், 2015

வல்லமை மின்னிதழ்-18-3-2915 -- நிதர்சனம்

50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை -வல்லமை மின்னிதழ்
18-3-2015
நிதர்சனம்
–சரஸ்வதி ராஜேந்திரன்.
வெளியூரிலிருந்து திரும்பி வந்த குடும்பத்தினர் வீடு திறந்து கிடப்பதைக் கண்டு பதறினர்.
மகன் ஒருபக்கம், மகளொருபக்கம், தந்தை ஒரு பக்கம் என ஓடியதைக்கண்ட தாய்,
“ச்சே … என்ன ஒரு சுய நலம்… அதது பொருட்களை பார்க்க ஓடுதுகள்” என அலுத்துக்கொண்டே தன் பீரோவை செக் பண்ணினாள்.
நல்லவேளை என் லேப்டாப் இருக்கு என்றாள் மகள்.
நல்ல வேளை என் பாஸ்போர்ட், விசா இருக்கு என்றான் மகன் .
நல்லவேளை என் ஏ.டி.எம். கார்டு இருக்கு என்றார் தந்தை.
முன் ஜாக்கிரதையா நகை, பண த்தையெல்லாம் லாக்கரில் வைத்தது நல்லதாப் போச்சு என்று சொன்ன அப்பா அம்மாவைக் கேட்டார், “உன்னுது ஏதாவதுபோச்சா?”
“ஆமாம், மேஜையில் இருந்த டைஜின் மாத்திரை அட்டையைக் காணோம்”
“அப்பா, எதற்கும் நம்ம ஏரியா போலீஸ்கிட்ட சொல்லிவைக்கலாமா?”என்று மகன் கேட்க …
“வேண்டாம், இதைக் காரணம் காட்டிஅவர் தினமும் என்கிட்ட நூறு ரூபாய் கறக்கிறதுக்கா?” என்றார் அப்பா.
“நம்பிக்கை”
Monday, March 2, 2015, 5:05
சிறுகதைகள்
– சரஸ்வதி ராசேந்திரன்.
(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)
‘’இது ரொம்ப தப்பு ஆறுமுகம், உன்னை நம்பிய மக்களை மோசம் பண்ணுவது நம்பிக்கைத் துரோகம், வேண்டாம்ப்பா‘’ என்றான் விஷால்.
மக்கள் கொண்டுவந்து கொட்டிய பணத்தை எல்லாம் சுருட்டிக் கொண்டு வெளிநாட்டிற்கு ஓடிவிடும் நோக்கத்தோடு ஃபைனான்சியர் ஆறுமுகம் ஃப்ளைட்டில் பறந்தார் குடும்பத்தோடு. தவறு என்று தடுத்த நண்பனையும் சட்டை செய்யவில்லை.
அடுத்த நாள் பேப்பரில் செய்தி:
சென்னையிலிருந்து கிளம்பிய மலேசிய விமானத்தைக் காணவில்லை, அதிலிருந்த முன்னூறு பேர் என்ன ஆனார்களென்றே தெரியவில்லை.
என் கதையை வெளியிட்ட வல்லமை மின்னிதழுக்கு நன்றி

சனி, 28 மார்ச், 2015

தமிழ்த்தேர்---இலக்கு ஐப்பசிமாத இத ழ்

மறு பக்கம் தேவதையின் கொலுசு --செப்டெம்பர்--2011

மறுபக்கம்
திருமணம் முடிந்த கையோடு , சூர்யா தன் தாயார் சிவகாமி அம்மாவை தன்னுடன் வந்து விடும்படி அழைத்தான் .
''இல்லேப்பா ,இங்க வீட்டை போட்டுட்டு எப்படி வர்றது ?சும்மா கிடந்தா வீடு வீணாய் போயிடும்லே ''என்றாள் .
''அம்மா ,உங்களுக்கு வயசாயிட்டு ,இனிமேலும் நீங்கள் தனியா கிடந்தது ஏன் கஷ்டப்படணும்?இனிமே உங்களை உட்காரவைச்சு கீர்த்தனா சமைச்சு போடுவாள் ,எல்லா வேலைகளையும் அவள் பார்த்துக்குவாள் .''
''நானும் உங்ககூட வந்துட்டா இந்த வீட்டை என்னப்பா செய்யறது ?''
''வித்துட வேண்டியதுதான் ''
மகன் இப்படி சொன்னதுமே ,அந்த முதிய பெண்மணியின் முகம் சுருங்கி போனது .
''வேண்டாம்பா ----இது உங்கப்பா வாழ்ந்த வீடு . விற்கல்லாம் கூடாது என் உயிர் இந்த
வீட்லதான் போகணும் .என் காலத்துக்குப்பின் நீ என்னவேணா செய்துக்கோ நான் வேண்டாங்களே ''கண்ணீர் மல்க கூறினாள் .
சூர்யா மனம் உருகி போனான்ஆனாலும் அம்மாவை தனியாக விட்டுப்போக விருப்பமில்லை அவனுக்கு .
''அப்படின்னா ஒரு மூணு மாசத்துக்காகவது எங்களோட சென்னையில் வந்து தங்கிட்டு திரும்ப இங்க வந்துடும்மா பிளீஸ் ''
சூரியாவின் பிளீஸ் அந்த தாய் உள்ளத்தை அசைத்தது .கீர்த்தனாவும் சூர்யாவுடன் சேர்ந்துகொண்டு கெஞ்சினாள் .
''அத்தை ,நானும் நம்ம வீட்டுக்கு புதுசு ,நம்ம வீட்டோட பழக்க வழக்கம் ,சம்பிரதாயம்
எனக்குத்தெரியாது நீங்கதான் கூட இருந்து நல்லது கெட்டதை சொல்லித்தரனும் --நீங்க எங்களோட கிளம்பி கண்டிப்பா வர்றீங்க ''
அவளின் சொல்லை தட்ட முடியாமல் சம்மதித்தாள் .சிவகாமி ,உப்புமாரவை,.சாம்பார் பொடி ,இட்லிப்பொடி ,முறுக்கு சீடை என்று பம்பரமாக சுழன்று தயார் செய்தாள்.
''எங்கம்மா இப்படித்தான் கொஞ்சநேரங்கூட சு ம்மாவே இருக்கமாட்டாங்க .ஏதாவது வேலை செஞ்சுகிட்டேஇருப்பாங்க ,எழுபது வயசு ஆனாலும் இருபது வயசு மாதிரி அவ்வளவு சுறு சுறுப்பு
பார்த்தியா கீர்த்தனா ?''
''இப்படியெல்லாம் ஓவரா வேலை செய்யக்கூடாது ,அப்புறம் இடுப்பு எலும்பு கழுத்து எலும்பு தேஞ்சுடும் , யப்பா இந்த வயசுக்கு எவ்வளவு வேலை செய்யறாங்க நானெல்லாம் சான்சே இல்லப்பா தோள்களை குலுக்கிக்கொண்டாள் கீர்த்தனா .
சென்னை வந்து இறங்கியதுமே சிவகாமி அம்மாள் மனதில் கவலை ஏற்பட்டுவிட்டது .கிராமத்தில் அவள் வீடு மூன்று கட்டு வீடு ---அதில் வேலை செய்த உடம்பு --இத்தனை சிறிய வீட்டில் எப்படி இருக்கப்போகிறேனோ ?என்று கவலை யாகிவிட்டது அவளுக்கு . அதனால் புது மருமகளை ஒரு வேலையும் செய்ய விடாமல் தானே எல்லாவற்றையும் செய்தாள் .கீர்த்தனா வேலைக்கு போய்விட்டு வீடு திரும்ப
தாமதமாவதால் ,அவளுக்கும் அது வசதியாகவே இருந்தது ,அவளது வேலையிலும்
அதிகம் கவனம் செலுத்தமுடிந்தது .
அதோடு ,கீர்த்தனாவிற்கு பெருமை தாங்க வில்லை எத்தனை பேருக்கு இப்படி கொடுத்து வைக்கும் ? பக்கத்து வீட்டுக்காரி சுமதியிடம் பேசும்போதெல்லாம் சொல்லி சந்தோஷித்தாள்
வழக்கம்போல் அன்றும் அவளிடம் “சுமதியக்கா இன்னிக்கு அத்தை எனக்கு ரொம்ப பிடிச்ச தேங்காய் மிட்டாய் செஞ்சு கொடுத்தாங்க இந்தாங்க அக்கா " என்று கொண்டு வந்து கொடுக்க உள்ளுக்குள் பொருமி தீர்த்தாள் சுமதி .
"ம் ஹும் ! நமக்கும் மாமியார்னு வந்து வாய்ச்சுதே ஒண்ணு .... நல்லா படுத்துகிட்டு உத்தரவு போடுமே தவிர ஒரு பைசா பிரயோஜனமில்லை. போதாதற்கு சண்டைவேறே !
அவரையும் டென்ஷன் பண்ணி அவர்கிட்டே எதையாவது போட்டுகொடுத்து.... வீட்டுக்குள்ள பிரச்சனையை உண்டாக்கி..... ச்சே ! இவ மட்டும் ஜாலியா இருக்காளே
என்று யோசிக்கும் போதே, அந்த சந்தோஷத்திற்கு ஒரு அதிர்வெடியையும் யோசித்தது அவளது குறுக்கு புத்தி!
அன்று ஞாயிற்றுகிழமை !
வழக்கம்போல் சுமதி வீட்டுக்கு வந்த கீர்த்தனா, " சுமதியக்க.... அத்தை இனிமே ஊருக்கு போகலையாம். எங்களோடவே இருக்கிறதா சொல்லிட்டாங்க.... ரொம்பவே சந்தோஷமா இருக்குதுக்கா" என்று சொல்ல, எரிச்சலை காட்டிகொள்ளாமல், மெல்ல ஆரம்பித்தாள் ....
" கீர்த்தனா, உன்னைய நம்ம தெருவே தப்பாபேசுதே " என்று திரியை பற்றவைத்தாள் .
"என்ன அக்கா சொல்றே?" பதறிப்போய் கேட்டாள் .
"ஆமா கீர்த்தி.... நம்ம காலனியே உன்னை திட்டிதீர்க்குது , வயசான மாமியாரை வேலை வாங்கிறியாம் .... உனக்கு ஈவு இரக்கமே இல்லையாம். ஜாடைமாடையா வம்பு பேசுறாங்க எல்லாம் பொறாமைதான், எல்லார்வீட்டுலேயும் இதே கிசு கிசுவா வலம்வருது , உன் காதுலே விழலையா? நீ வேலை வாங்குறது மாதிரி பேசுறாங்க அவர்களுக்கு இது எப்படி தெரியும்? சம்பந்தபட்டவங்க......எப்பா புரளி பேசுறதுன்னா நம்ம பெண்களுக்கு கேட்கவா வேண்டும். சரி அதை விடு கீர்த்தி, சாப்பிட்டாச்சா ?" பற்றவைத்து விட்டு பதறாமல் பேசினாள் சுமதி.
அவ்வளவுதான்! கீர்த்தனாவுக்கு எதுவுமே ஓடலை, வீட்டுக்கு வந்ததும் வராததுமா கொட்டி தீர்த்தாள் சூர்யாவிடம். " கோபப்படாதே ... இது சாதாரண விஷயம்! அம்மா கிட்டே நான் பேசுறேன்" அவளை அமைதி படுத்தின சூர்யா, அம்மாவின் அறைக்கு வந்தான்......
" அம்மா , இத்தனை நாள் நீ வேலை செய்ததை பார்த்து கீர்த்தனா நல்லா கத்துகிட்டா, இனிமே நீ எந்த வேலையையும் செய்யகூடாது. எல்லாத்தையும் கீர்த்தனா பார்த்துப்பா. நீ நல்லா சாப்பிட்டுட்டு ராமா, கிருஷ்ணான்னு உட்கார்ந்திருந்தா அதுவே போதும்" என்று அவன் சொல்ல அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்த்தாள் சிவகாமி அம்மாள்!
"என்ன சூர்யா.... என்னாச்சு... ஏன் திடீர்னு இப்படி சொல்லுறே? நான் என்ன புதுசாவா வேலை செய்யிறேன் ஏன் இப்படி கண்டிச்சு பேசுறே? " என்ற தாயின் கம்மிய குரல் அவனை இளக்கியது.
" இல்லேம்மா... கீர்த்தனாவை உக்கார வச்சு நீ வேலை செய்யுறதால அக்கம் பக்கம் உள்ளவங்க தப்பா பேசுறாங்க அம்மா, இந்த தள்ளாத வயசிலே, உன்னை வேலை செய்ய சொல்லி கொடுமைபடுத்தறதா சொல்லுறாங்க;. கீர்த்தனா ரொம்ப நொந்து போயிருக்கிறா !~ " என்று சொல்ல " இவ்வளவுதானா விஷயம்" என்பதாக பார்த்த அந்த அம்மாள் மகனிடம் சொன்னாள் .
"சூர்யா, அவதான் அறியா பொண்ணு, அக்கம் பக்கத்திலே இருக்கிறவங்க பேசுறத எல்லாம் மனசுலே எடுத்துகிறா ... நீயாவது அவளுக்கு எடுத்து சொல்லகூடாதா?"
கீர்த்தனா வேலைக்குப்போற பொண்ணு. காலையிலே சாப்பிட்டும் , சாப்பிடாம, உன்னோட கிளம்பி வர்றவ, சாயங்காலம் அலுத்து, சலித்து வீட்டுக்கு வரும் போது பார்க்கவே பரிதாபமா இருக்குப்பா. அதான் காபி போட்டு அவ கையிலே கொடுக்கிறேன். எனக்கு ஒரு மக இருந்தா செய்யமாட்டேனா?"
அதோட இந்த உடம்பு ஓடி ஆடி உழைச்சு வளர்ந்த உடம்பு சும்மா உட்கார்ந்திருக்க தெரியாது. அது மட்டுமில்லையப்பா வயசான காலத்தில் சும்மா உட்கார்ந்து இருக்கிறதே பெரிய நோயப்பா. அப்படி உட்கார்ந்தா மனசு தேவையில்லாம பலதையும் நினைச்சு உழலும் வசதிக்குபழகிடுச்சுன்னா உடம்பு அசதியிலே விழுந்திடும் நடக்க முடியாது உட்கார்ந்தா எழுந்திருக்க முடியாது பிறகு எல்லா நோயும் உடம்புல குடி கொண்டிடும் .உங்க இரண்டு பேருக்கும் பெரிய சுமையா மாறி ப்போயிடுவேன் .உடம்பும் ஒரு யந்திரம்தாம்ப்பா - ஓடிகிட்டே இருந்தாத்தான் நல்லது உட்கார்ந்தா துருபிடிச்சுடும்.
பொறாமை பிடிச்சவங்க எதையாவது சொன்னா அதை கேட்கிறதா ?உங்க இரண்டு பேருக்கும் நான் வேலை செய்யறது பிடிக்கலையின்னா சொல்லுங்க .நான் ஊருக்கே போயிடறேன் என்னால மருமகளுக்கு கெட்ட பெயர் வேண்டாம் ''கண்களில் நீர் தளும்ப சிவகாமி அம்மாள் பேசியதை அத்தனை நேரம் வெளியிலிருந்து கேட்ட கீ ர்த்தனா
ஓடி வந்து காலில் வீழ்ந்தாள் .
''அத்தே -என்னை மன்னிச்சுடுங்க சுமதிக்கு என்னைக்கண்டாலே பொறாமை ,அதான்
அவளாகற்பனை பண்ணி கலகத்தை உண்டு பண்ணுறா இனி மத்தவங்களை ப்பற்றி எனக்கு கவலையில்லை அத்தே நீங்க சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தா போதும் .வழக்கம் போல நீங்களே எல்லாம் பாருங்க ,,,,''சொன்னபடியே ஞாயிற்றுக்கிழமையை கொண்டாட மதியத்தூக்கத்திற்கு விரைந்தாள் கீர்த்தனா .
தேவதையின் கொலுசு ------செப்டெம்பர் -2011

லெட்சுமியை அடிக்காதீங்க குமுதம் -24- 8-91

லெட்சுமியை அடிக்காதீங்க
அதிர்ந்து புலம்பினாள் மரகதம் , ''என்னங்க ,நிசமாலுமா சொல்றீங்க >நம்ம லெட்சுமியை வாங்கவா இந்த ஆளு
வந்திருக்காரு ?ஐயோ ஒரு வருஷமா ,இரண்டு வருஷமா கிட்டத்தட்ட நாலு வருஷமா இந்த லட்சுமி ஒரு நாலாவது
கறவை குறைஞ்சிருப்பாளா ?இவ வந்த பிறகுதானே நம்ம வீட்டுல பல நல்லது நடந்துச்சு ,இதைப்போய் விற்க
என்ன முடை வந்துச்சுன்னு விற்க நிற்கிறீங்க ?''
''இதைப்பாருடி ,இது உங்கப்பன் வீட்டு ஆஸ்தியிலே வாங்கின மாடு இல்லே ,நீஒப்பாரி வைக்க .என் இஷ்டம் வாங்கினேன்
என் இஷ்டம் விற்கிறேன் நீயாரு கேட்க ?போடி உள்ளே ''காட்டுக்கத்தலை கத்தினார் பரமசிவம்
உள்ளே போனாலும் புலம்பிக்கொண்டே போனாள் மரகதம்
தனக்கு முன்னால் நடந்த ரகளையைப்பார்த்து பயந்து போன ரங்கசாமி ,''என்னண்ணே ,வீட்டுல மாட்டை விற்க இஷ்டமில்லே
போலிருக்கே ,''என்றான்
''அட அதை விடுப்பா ,இந்த பொம்பளைங்களே இப்படித்தான் மாடு கோழின்னு பாசம் வைச்சுட்டு தவிப்பாலுக ,நீ பணத்தை எடு
ரங்கசாமி பேரம் பேசி ,இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய்க்கு வாங்கின லெட்சுமியை மூவாயிரத்து ஐநூறு ருபாய் பரமசிவம்
பிடிவாதமாக சொல்ல கடைசியாக நூறு ருபாய் குறைத்துக்கொண்டு இரண்டாயிரத்து தொலாயிரத்துக்கு வெற்றிகரமாக
பேரம் பேசி முடித்து விட்டதாக பெருமையுடன் நினைத்துக்கொண்டான்
''சரி அண்ணே ,உங்க சம்சாரம் கையாலே லெட்சுமியை பிடிச்சுக்கொடுக்க சொல்லுங்க ''என்றான் ரங்கசாமி
உள்ளேபோய் பரமசிவம் மரகதத்தை மாட்டை பிடித்துக்கொண்டு வரச்சொல்ல --ஏதோ சொந்த பெண்ணை பலி
கொடுப்பதுபோல எண்ணி மரகதம் ஒப்பாரி வைத்தபடியே மாட்டை பித்து வந்தாள்
பயந்து போன ரங்கசாமி ,''இதைப்பாருங்கம்மா ,வாங்கிற நாங்களும் நல்லாயிருக்கனும் ,விற்கிற நீங்களும்
நல்லாஇருக்கனும்னு நான் நினைக்கிறேன் ,சந்தோஷமா பிச்சு கொடுக்கிறதா இருந்தா நான் வாங்கிக்கிறேன் இல்லே--''
பரமசிவம் மரகதத்தை முறைக்க ---''இல்லண்ணே ,நாலு வருஷமா வளர்த்திட்டேனா அதான் ,---என் லெட்சுமியை
நல்லா பார்த்துக்குங்க .....அடிக்காதீங்க ''வாழ்த்தி மாட்டை பிடித்துக்கொடுத்தாள் மரகதம் .
ரங்கசாமி சந்தோஷமாக மாட்டை பிடித்துக்கொண்டு நடந்தான் .அவன் தெரு முனையை அடைந்ததும் கண்களைத்துடைத்துக்
கொண்டு உள்ளே வந்த மரகதம் ,''அந்த ஆசாமி எங்க வாங்காம போயிடுவானோன்னு பயந்தே போய்ட்டேங்க நல்ல வேளை ''
''பைத்தியம் நீ ஓவர் ஆக்ட் பண்ணி காரியத்தை கெடுத்திட போகிராயோன்னு நானில்ல பயந்துட்டேன் ஏமாந்தவன் கிடைச்சா
விட்டிருவேன்னா சனியன் நம்ம விட்டு தொலைஞ்சுது விடு ,இரண்டு நாளைக்கு இந்த ஊரிலே இருக்கக்கூடாது கிளம்பு ''
என்று வெளிஊருக்கு கிளம்பினர்
குமுதம் 24-8-91

குமுதம் ---பேட்டி

நீண்ட நாட்களுக்குப் பின் குமுதத்தில் நான்(புனைபெயருடன்)

தமிழ்த் தேர் ---2014 கவிதையும் கற்பனையும்

கவிதையும் ,கற்பனையும்
நடக்க முடியாத செயல்களை
மனச் சித்திரங்க ளாகப்பார்ப்பதும்
நடை பெறாத செயல்களை
செயல் வடிவங்களில் பொருத்திபார்ப்பதும் கற்பனை
கருவறைக்குள்ளே கடவுள் இருப்பதுபோல்
கவிதைக்குள்ளே கற்பனை இழையோடும்
கற்பனைக் குதிரையில் ஏறினால்தான்
கவிதைத் தேரையே இழுக்க முடியும்
கவிதையும் கற்பனையும் இரட்டைப் பிறவிகள்
ஒன்றில்லமல் ஒன்று இல்லை
கவிதைக்கு பொய் அழகு அந்த
பொய்யே கற்பனையின் வெளீயீடு
மூலையிடம் தேடி மூக்கு முனைபார்த்து
சீர்கோத்து தளை நோக்கி அமைக்கும்
கவிதையில் கற்பனையில்லையெனில்
அதில் சாறும் இருக்காது பொருளும் அமையாது
கற்பனை கலந்து சொற்களைத்
தெளிக்கும் கவிதைச் சாரல்
உள்ளத்தை உருக்கி உண்ர்வில் நிறைந்து
உலவிடும் இனிமை சூழல்
கருத்துக்கேற்ப சொற்களை வசப்படுத்தி
கவிதையில் அழகுப்படுத்துவதே கற்பனை
கவித்துவம் இன்றி கவிதை இல்லை
கற்பனையின்றி கவிதையில் சுவை இல்லை
கவிதையின் அடிப்படை இலக்கணம் ஆனால்
கவிஞர்கள் இலக்கணம் பார்த்து பாடுவதில்லை
புலவன் பாட்டு பாடினால் அதில்
இலக்கணம் தானே அவ்ன் பின்னால் ஓடிவரும்
கவிதைக்கு உயிரூட்டுவது ஓட்டம் அது
கவிஞனுக்கு இயல்பாக வரும் ஊற்று
கற்பனைச் செறிந்த கவிதை அது
அற்புதமாய் நிறைக்கும் மனதை
கற்பனையில் மனம் கரைவோம்
கரைந்தே கவிதை வரைவோம்
சரஸ்வதி ராசேந்திரன்
மன்னார்குடி
தமிழ்த்தேர் ----2014

திங்கள், 16 மார்ச், 2015

சாட்டர்டே ஜாலி கார்னர், சிறுகதை ராணி சரஸ்வதி ராசேந்திரன்.


சாட்டர்டே ஜாலி கார்னர், சிறுகதை ராணி சரஸ்வதி ராசேந்திரன்.

 முகநூலில் அறிமுகமானவர் சரஸ்வதி ராசேந்திரன் அம்மா. இவர் என் தோழியான பிறகு சில நாள் கழித்துப் பார்த்தால் மூக்குத்தி போட்ட சின்னவயதுப் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதுவும் இவர்தானோ என நினைத்து நீங்களா எனக் கேட்டிருந்தேன். அப்போதுதான் சொன்னார். நாங்க உங்களைக் கண்டு பிடிச்சிட்டோம் தேனு நீங்க மன்னையில் படிச்சீங்களா என்று கேட்டார். ஆமாம் என்றதும் தன் மகள் தேன்மொழி என் வகுப்புத் தோழி என்று சொன்னார். அப்போதுதான் அந்தப் புகைப்படத்தை ஊன்றிக் கவனித்தேன். என் கூட தூய வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற தேன்மொழியின் அம்மா அவங்க என்பதைக் கண்டுபிடிச்சேன். 

ப்ளஸ்டூவில் அவங்க ( தேன்மொழி ) மாத்ஸ் க்ரூப் நான். நான் ப்யூர் சயின்ஸ் குரூப். ( டாக்டராகணும்னு ஆசை அதுனால நீங்க ஒரு கணக்கு மேதையை இழந்துட்டீங்க. அவசரப்படாதீங்க. நான் கெமிஸ்ட்ரிதான் படிச்சேன். அதுனால ஒரு நல்ல மருத்துவரையும் (!) இழந்துட்டீங்க. ஹிஹி - அப்போ அப்போ நம்மளப் பத்தியும் சொல்லிக்கணும். :) 


தேன்மொழி புன்சிரிப்புக்குச் சொந்தக்காரர். அதிகம் பேசியதில்லை. ஆனால் அவரும் நானும் ப்ளஸ் ஒன்னிலேயே மூக்குத்தி போட்டிருந்தோம். ( என் வகுப்பில் ஷெண்பகாவும் போட்டிருப்பாள். என் வகுப்பு டீச்சர் ஒரு முறை - அவர் கிறிஸ்துவர் - எங்களிடம் கேட்டார். ஏன் மூக்கு குத்தியிருக்கீங்க கல்யாணம் ஆயிடுச்சா என்று. அவ்வ்வ்வ்வ்வ் என்று முழித்துவிட்டு இல்லைங்க மேடம் வீட்டுல குத்திக்க சொன்னாங்க என்று சமாளித்தோம். )

சரி சரஸ் மேடம் பத்தி சொல்றேன். அவர் மிக அருமையான தோழி. தோழியின் அம்மாவாக இருந்தாலும் சம வயதுக்காரர் போல கலாய்ப்பார் படைப்புகளையும் பகிர்வுகளையும் உடனுக்குடன் படித்துப் பாராட்டுவார். மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளர். பல கதைகள் படித்திருக்கிறேன். 2013 இல் அட்டாக் என்றொரு சிறுகதை வந்திருந்தது குமுதத்தில். இதை எல்லாம் இணையத்திலும் வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார். சிறுகதைகளுக்காகப் பல அவார்டுகளும் வாங்கி இருக்கிறார்.  அவரைப் பற்றி  சாட்டர்டே ஜாலி கார்னரில் பகிர்வதில் பெருமையுறுகிறேன். 

அவங்க சிறுகதைகள் எழுத ஆரம்பிச்சதுபத்தி ஒரு கேள்வி கேட்டேன். அதை இங்கே பகிர்ந்துள்ளேன். 

/// சரஸ் மேம் நீங்க சிறுகதைகள் எழுதத் துவங்கியது எப்ப.? அத வீட்ல இருக்கவங்க எப்பிடி எடுத்துக்கிட்டாங்க. இதுவரை எத்தனை புத்தகங்களில் எழுதி இருக்கீங்க. ///

பள்ளிப்பருவத்திலேயே  எனக்கு எழுத்தின்மீது ஈடுபாடு உண்டு ,சின்னச் சின்னகவிதைகள்(தத்து பித்து கவிதைகள்)    எழுதி தோழிகளிடம் காட்டும்போது ஆஹா ஓஹோ என்று புகழ்ந்ததுமே
அது கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்து விட்டது ,ஆனால் இந்த வேலையெல்லாம் தெரிந்தால் வீட்டில்...எல்லாம் கட்டாகிவிடும்
அதனால் புகைச்சலோடு சரி , வீட்டுக்குள் பூனை மாதிரி இருந்தாலும்
பள்ளிக்கூடத்தில்  செம ஜாலி பேர்வழி.பள்ளியிறுதி வகுப்போடு இறுதி பத்தொன்பது வயதில், திருமணம்,கணவர்  தலைமை  ஆசிரியர் டெரர் பெர்சன்  அதனால் என் எழுத்துஆசையை  வெளியிட வழியில்லை ,மகள் பிறந்தாள் தைரியமும் வந்தது   ,என் ஆசையை சொன்னதும்  எதிர்ப்பு இல்லை.அவரே கார்டு ,கவர் வாங்கி தந்தார்   என் தத்து பித்து கவிதைகளை
அவரே சின்ன புத்தகமாக அச்சடித்து கொடுத்தார்  நண்பரின் பிரஸில்
அதுதான் என்   எழுத்துழுத்துப்பிரவேசம்  பின் கொஞ்சம் முன்னேறிவிமசர்னம் ,துணுக்கு,என எழுதினேன் பத்திரிக்கைகளில்.அடுத்தகட்டமாக கதை எழுத ஆரம்பித்தேன்,அதுபோன வேகத்திலேயே திரும்பியது கண்டு வருந்தினாலும்  ஒரு ஆறுதல் அப்பொழுதெல்லாம்  திரும்பி வரும் கதையுடன் ஒரு துண்டு பிரசுரமும் இருக்கும்  உங்கள்கதையை பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்,ஆனாலும் உங்கள்தகுதியை குறைத்து மதிப்பிடவில்லை தொடர்ந்து உங்கள் ஆதரவை வேண்டுகிறோம்ஒரேயடியா நிராகரிக்கலே,,அவ்வளவுதான் விடாது கருப்பு போல கஜினிமுகமது படையெடுப்புதான் குமுதத்தில ;;  நம்பினோர் கைவிடப்படுவதில்லை நான்கு மறை தீர்ப்பு இல்லையா?அந்த நாள்
வந்தது மாருதியின் அட்டகாசமான படத்துடன்,  கதையின் முதல்
மூன்று வரிகள் என் கையெழுத்திலேயே (புதுமையாம் ) என் பெயரைத்தாங்கி குமுதம் அமுதமாக வந்தது, அன்றுதான் நான் சிறு கதை எழுத்தாளராக  அங்கீகரிக்கப்பட்டு கிரீடம் சூட்டப்பட்டது .

முதல் கதை குமுதத்தில்27-10- 85ல் ” பிஸினஸ்னா பிஸ்னஸ்தான் ”
முதல் பிரசவம்  ,அன்று பாரதிராஜா பட தேவதைகள் என்னைச்சுற்றிஆட நான் சிறகில்லாமல்  வானத்தில் பறந்தேன் .அது எல்லோருக்கும் பொதுவானதுதானே ,இப்படியாக என் எழுத்துப்பயணம் தொடங்கிற்று  இது வரை சுமார் 200 நூறு கதைகள்  வந்துள்ளன பத்திரிக்கை விபரம்,,குமுதம்,அவள்விகடன்,
 ஆனந்தவிகடன்,  நாணய விகடன்’ சாவி ,இதயம்,குங்குமம்,சுமங்கலி, கல்கி, கலைமகள்,அமுதசுரபி ,இனிய உதயம் ,தேவதை ,தேவதையின் கொலுசு,தினத்தந்தி ,குடும்பமலர் .வாரமலர்,பெண்கள்மலர் .தினமணிக்கதிர்,மங்கையர்பூமி,கதைபூமி ,இலக்கியப்பீடம்,.பாக்யா,ஜெமினிசினிமா.மின்மினி.,தங்கமங்கை,தேவி  இளந்தளிர் ஆகியவற்றில் கதைகள் வந்துள்ளன  இரண்டுமுறை
டி,வி,ஆர் சிறுகதை போட்டியில்  ஆறுதல் பரிசு பெற்றுள்ளேன்,   அலிபாபா,இலக்கியபீடம் ,வாரமலர்,அமுதசுரபி பெண்கள்மலர் ஆகியவற்றில் கவிதைகளும் வந்துள்ளன ,,என் புனை பெயரான மன்னை சதிரா என்ற பெயரில் எழுதியதால்   தோழிகள் நீண்டகாலம் கழித்துதான்  என்னை முழுமையாய் அறிந்து  பாராட்டினார்கள் தொடர்ந்து   எழுத ஊக்குவித்தார்கள் ..தொடர்கிறது.


 1993ம்வருடம் கி.வா ஜ ,திருப்பூர் கிருஷ்னண் ஆகியோர் என்சிறுகதைகளுக்கு பாராட்டு தெரிவித்தது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது ,தோழிகள் எல்லாம் எனக்கு ஊக்கம் கொடுத்தார்கள் உன்கிட்ட ஜாக்கிரதையா பேசணும் இல்லேன்னா நீஅதை கதையா எழுதிடுவே என்று சொல்லச்சொல்ல எனக்குள்சின்ன கர்வம் எட்டிப்பார்த்ததும் உண்மை ,உறவினர்களில் சிலபேர் யாராவது தெரிஞ்சவங்க பத்திரிக்கையில் இருக்காங்க அதான் உன்கதைகள் வருது என்று சொன்ன போது நான் சொன்னேன் அதில்லை என்கதையை போடறதுக்கு நானே கொஞ்சம் பணம் வைத்து அனுப்புகிறேன் என்று கடுப்பா சொன்னதை நிஜம் என நினைத்து சிலர் பணம் அனுப்பி ஏமாந்த கதையை என்னிடமே சொல்லி திட்டினார்கள் ,முதல் கதை அதுவும் எனக்குப்பிடித்த குமுதத்தில் வந்தபோது....எனக்கு சிறகு முளைக்காத கதைதான் போங்கள் அதை அனுபவித்தவர்களுக்கேத்தெரியும் இதுதான் நான் எழுத்தாளரான கதை ,அந்த நோய் இன்னும் என்னை விடவில்லை ..

வல்லமை மின்னிதழில் கடித போட்டியில் பரிசு கிடைத்ததும் முதல் கதை அனுபவமே ஏற்பட்டது சிறுகதை காம் மில் என்கதைகளை வெளியிட்டுள்ளார்கள் வல்லமையில் கவிதை இரண்டு வந்துள்ளது 

எனக்கு பிடித்தகதை கலை மகளில் வந்த ‘’மெழுகுவர்த்திகள்’’ கல்கியில் வந்த ‘’இலட்சிய அம்புகள்””வீட்டுக்குள்ளேயே இருப்பதால் குடும்ப கதைகள்தான் அதிகம் நான் எழுதியகதைகளில் எனக்குப்பிடித்தது ‘’கல்கியில் வந்த லட்சிய அம்புகள்’’ கலைமகளில் வந்த //மெழுகு வர்த்திகள்,,--குறுக்கீடுகள்’’

முதல் தொகுப்பு  --
பொன்முடி பதிப்பகம் ,,அரு ,சோமசுந்தரன் அவர்களால்  1989ல்  வெளிடப்பட்டது  புத்தகத்தின் பெயர்; மனக் கணக்கு

இரண்டாவது புத்தகம்;; அலமு புத்தக   நிலையம்   -தயாரிப்பு கரு செல்லப்பன் ,புத்தகம்--மாணவர்களுக்கான நீதிக் கதைகள் 1994

மூன்றாவது புத்தகம்;அலமு புத்தக நிலையம்-தயாரிப்பு கரு செல்லப்பன்
புத்தகம்’’சிறப்புத்  தரும்  சிறுவர் கதைகள்..

இதைத்தவிர பெரிதாக ஒன்றும் இல்லை, எல்லா புகழும் இறைவனுக்கே    என் புனை பெயர்கள்’மன்னை சதிரா,ஆர் சரஸ்வதி,, சரஸ்வதி ராசேந்திரன்.

டிஸ்கி :- அடேயப்பா எவ்வளவு சாதனைகள். குடும்பத்தலைவியா இருந்துகிட்டு எழுத்துலகிலும் சாதிப்பது என்பது இமாலய சாதனைதான்.புனை பெயரான மன்னை சதிரா ரொம்ப அழகா இருக்கு.நீங்களே பெரிய எழுத்தாளரா இருந்தும் என்னைப் போன்றவர்களையும் ஊக்குவிப்பதுக்கு மிக்க நன்றி. 

 உங்க மூன்று புத்தகங்களுக்கும் முதலில் வாழ்த்துகள். இடையறாது நீங்கள் புரியும் எழுத்துல சேவைக்கும் வந்தனங்கள்.நாளைக்குப் பெண்கள் தினம். இந்த 104 ஆவது சர்வதேச மகளிர் தினத்தில் சிறுகதை ராணியான உங்களைப் பத்தி என் ப்லாகில் பகிர முடிந்தமைக்கு என் வாழ்த்தைத் தெரிவிச்சுக்கிட்டு சந்தோஷமும் பெருமையும் கொள்கிறேன் சரஸ்மா. :) மகளிர்தின வாழ்த்துகள் தோழிகளே. மங்கைகளே . :) 

ஞாயிறு, 15 மார்ச், 2015

Parvatham Thiyagarajan Thanjavur Mudaliar Sangam felicitated for receiving the 2nd prize for All India Level small story writing competition.Thenmozhi reced the shawl on her mother's behalf.

.Parvatham Thiyagarajan
Thanjavur Mudaliar Sangam felicitated for receiving the 2nd prize for All India Level small story writing competition.Thenmozhi reced the shawl on her mother's behalf.

மாம்பலம்சந்திரசேகர்-இலக்கியபீடம் இணைந்து நடத்திய சிறுகதைபோட்டியில் பரிசு பெற்ற சிறுகதை

மாம்பலம்சந்திரசேகர்--இலக்கியபீடம் இணைந்து நடத்திய சிறுகதை போட்டியில் பரிசு பெற்றகதை-2015-மார்ச் இதழிலில்

ரூபன் -யாழ்பாவணான் இணைந்து நடத்தும் உலகம் தழுவிய சிறு கதை போட்டி2015

ரூபன்  -யாழ் பாவணான் இணைந்து நடத்திய உலகம் தழுவிய சிறுகதைபோட்டி- தலைப்பு அவர்கள்  ‘தடம் மாறிய பண்டிகை ‘’ கதை நாங்கள்  முண்ணூறு வார்த்தைகளில்

                 தடம் மாறிய பண்டிகை

                                     பொங்கல்
‘’என்னங்க  சொல்றீங்க  நாம பொங்கலுக்கு  கிராமத்துக்கு போறாமா?”
அதிர்ந்துபோய்  கேட்டாள் சுனிதா

‘’ ஏன் அதிர்ச்சியா இருக்கா சுனிதா,வேலை வேலைன்னு இங்க வந்து செட்டிலாகிவிட்டோம்  கிராமத்தையே  மறந்துட்டோம் எனக்கு பழைய நினைவுகள் வந்து விட்டது  ஆஹா   பொங்கல் விழாவை கிராமத்திலிருந்து  அனுபவிச்சு பார்த்தவங்களுக்குத்தான் தெரியும் அதன் அருமை  அதான் இந்த வருஷம்  நம்ம பிள்ளைகள் அதை அனுபவிக்கணும்  நினைக்கிறேன்  அதான் இந்த பிளான்  ‘’என்றான்குமார் 
சொல்லிவிட்டானேத்தவிர டிக்கட் கிடைப்பது அரிதாக இருந்தது .மிகவும் கஷ்டப்பட்டு  பஸ்ஸில்  கிடைத்தது .
அப்பா   வர்ணித்த  பொங்கல் விழா பிள்ளைகளின் ஆர்வத்தை தூண்டகுஷியாக கிளம்பினார்கள்..
பத்து வருஷங்களுக்குப் பிறகு  பிள்ளை  குடும்பத்தோடு வருகுகிறசந்தோஷம் பெற்றவர்களுக்கு பேரக்குழந்தைகளுக்குப்பிடித்த வை  எது என்று தெரியாததால் பக்கத்து ஊருக்குப் போய் புது விதமான பிஸ்கட்டுகள்,சாக்கிலேட்டுகள் என்று வாங்கி வந்து  வைத்தார் .தணிகாசலம் ., டிவியையெல்லாம்  துடைத்து வைத்தார் நாற்காலிஷோபாவெல்லாம் பளீரென துடைத்து வைத்தார் 
ஆட்டோவில் வந்து இறங்கினான் குமார் குடும்பத்துடன் 
வயதையும் மறந்து ஓடிவந்த தணிகாசலம் ‘’வாம்மா,வாப்பா என் செல்ல பேரக்குழந்தைகளா?’’ என்றுகூறி அவ்ர்கள் பெட்டி பைகளை கையில் எடுத்து உள்ளேப்போனார் குமார் நீஉள்ளெ போ நான் கூலி கொடுத்துவிடுகிறேன் ‘’என்று கூறி ஆட்டோவுக்கு பணம் கொடுத்து அனுப்பிவிட்டு உள்ளேவந்தார் தணிகாசலம் 
என்னப்பா குமார் பயணம் சவுகரியமா இருந்ததா? சரோஜா வென்னீர் போட்டு வைத்தாயா  எல்லோரும் குளிக்க ?’’
எல்லாம் ரெடியா இருக்கு   சுனிதா குளிக்கலாம் வாம்மா ‘’ மருமகளை அழைத்தாள்.அப்பாவும் பிள்ளையும் ஊர் நலம் விசாரித்துக்கொண்டார்கள்,  பின் கொல்லைப்புரம் சென்ற குமார் ‘’என்னப்பா ,ஒரு மாடுதான் நிற்குது மற்றவை..?’’  அதெல்லாம் கொடுத்தாகி விட்டது .  நங்க ரெண்டுபேர்தானே உங்க அம்மாவால வேலை செய்ய முடிய்லே  அதான் ‘’என்றார் தணிகாசலம் 
‘ஏம்ப்பா,மாரிமுத்து வறதில்லையா வேலை செய்ய?>’’
‘  நீ பழைய கிராமம்னு நினைச்சுகிட்டு பேசறியா?  மாரிமுத்து மகன் துபாயில்   இருக்கான்  நல்ல மாடி வீடு கட்டிட்டான்     வேலைக்குபோகக்   கூடாதுன்னு சொல்லிட்டான் ,அதனால வரதில்லை  கிராமமே தலை கீழா மாறிட்டுப்பா ‘’
அப்பாசொன்னது நிஜம்தானு  ...கிராமத்தில் நடந்தவைகளைப்பார்த்து புரிந்து கொண்டான் 
நைட்டிகளில் பெண்கள்,,ஹாஃப் டிராயர்க
ளில் ஆண்கள் சகட்டு மேனிக்குப் போய்க்கொண்டிருந்தனர் ’
பொங்கல்னா கல்லில் அடுப்புக்கட்டி அதற்கு கோலம் போட்டு  பானைகளுக்கும் கோலம் வரைந்து புத்தரிசி போட்டு பொங்கல் வைக்கும் அம்மா காஸ் அடுப்பில் அலுமினிய பானையை வைத்து பொங்கலிட்டதை பார்த்து  சுனிதா கணவனிடம்  என்னங்க என்னவோ சொன்னீங்க இப்ப அத்தை இதிலே வைக்கிறாங்க”என்று ரகசியமாக கேட்டாள்குமாரால் பதில் சொல்லமுடீயவில்லை .அடுத்த  நாள் மாட்டுப்பொங்கல் என்றால்  எப்படி காலை நான்குமணிக்ககே எழுந்து அல்லி வட்டம் புள்ளிவட்டம் போட்டு கள்ளிச்செடி நட்டு பூ வைத்து வீடே களேபரம் ஆகும் ஆனால்  மாட்டை சும்மா கு
ளிப்பாட்டி பேருக்கு இரண்டு நெட்டி மாலை போட்டு குங்குமம் வைத்து பூஜை செய்தார் தணிகாசலம்   மாலை மேய்ச்சலுக்குப்போய்வரும் மாட்டை கோனார்கள் வாத்திய இசையோடு அழைத்து வந்து வீடு   வீடாக விட்டு  வேஷ்டி துண்டு என்று மரியாதை பெற்றுக்கொள்வார்கள் என்று பிள்ளைகளிடம் சொல்லியிருந்ததால் பிள்ளைகள் ‘’என்னப்பா   நீ சொன்னதிலே ஒண்ணுகூட நடக்கலையே என்று கேட்க  குமார் அப்பாவை பார்த்தான். ‘’குமார்  எல்லாமே தடம் மாறிட்டுப்பா,   நசிஞ்சு  போயிட்டுப்பா பாரம்பரியம் எல்லாம்     ஏன் வேறு வழியில்லாம நாங்களும் மாறிட்டோம் ,,
‘’   நான் பழைய கிராமத்தை நினைச்சு  பிள்ளைகள் நல்லா எஞ்சாய் பண்ணுவார்களென்று அழைத்து வந்தேன் எனக்கும் ஏமாற்றம் என் பிள்ளைகளுக்கும் ஏமாற்றம்தான் . ரேக்ளாபோட்டி,,ஜல்லிகட்டு என்று ஒன்றுமேஇல்லாமல் வெறுமையாக முடிந்த இந்த பொங்கலுக்காக
எத்தனை கன்வுகளுடன் ஊர் வந்தோம் எல்லாமே நசிந்து போய்விட்டதே  ,மக்களெல்லாம் சிட்டியைப்போல் டிவிக்களில் ஒன்றிக் கிடந்தது பார்க்க வேதனையாக இருக்க   வெறுமையுடன் தடம் மாறிப்போன பண்டிகையை நினைத்து பெரு மூச்சு வீடபடியே ஊர் திரும்பியது குமார் குடும்பம்

சரஸ்வதி ராசேந்திரன்   மன்னார் குடி 

வெள்ளி, 13 மார்ச், 2015

இலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு