துன்னலம் தோய்ந்த மார்பே
குப்பைக் கூளம் கழுநீர் சேற்றில்
களித்துக் கிடக்கும் கண்ட இடமெல்லாம்
தூய்மை இன்றி வாய்வைக்கும் பன்றியாய்
நாற்ற மெடுக்கும் ஆறல் மீனை
நீரில் மூழ்கி தின்னும் நீர்கோழியாய்
நாற்றம் பிடித்துப்போய் தினம் தினம்
தேடிப் போய்த் தின்னும் நீர் நாயாய்
உயிரில் கலந்து உள்ளம் நிறைந்து
உறவில் சிறந்த தும்பப் பூவிதழ்
தூய்மை கொண்ட குலப்பெண் நானே
பக்குவம் மிக்க பண்பில் வளர்ந்தவள்
இல்லற வாழ்வில் இரு பாலருக்கும்
அகம்புறம் சுத்தம் அவசியம் வேண்டும்
கறைபடு வாழ்வை கையகப் படுத்தி
கயமை மிகுபல கற்றீர் நீரே
எச்சில் கனியை என்றும் விரும்பேன்
பரத்தையர் பற்றிய மார்பை பற்றேன்
தள்ளியே நில்லும் தனித்தே வாழ்வோம்
தாழ்வுறும் செய்கை வாழ்வுக்குத் தேவையில்லை
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக