சந்ததிப் பிழை
விதைத்த விதைப்பு வினையாய் வளர்ந்து
புதைந்து போகாது புறப்பட்டு வந்தது
சிதைந்து போய் சீர்கெட்டுப்
பதைப் பதைப்புடன் பதறி கிடக்கிறோம்
வந்து பிறந்தோம் வாழ முடியவில்லை
தந்த இறைவனும் தவறை திருத்தவில்லை
எந்த பக்கமும் ஏளனமும் கேலியும்தான்
சந்ததிப் பிழையால் சந்தி சிரிக்கிறோம்
பெற்ற தாயும் பேணிட வில்லை
உற்ற உறவும் உதாசீனப் படுத்துது
முற்றும் பகையெல்லாம் முறிந்திடப் போமோ
ஊர்சுற்றி வந்தாலும் உலகமும் ஒதுக்குது
விழிப்புடன் வாழவும் வழி இல்லே
அழிவிலாப் பாதையும் அமைந்திட வில்லை
இழிவெலாம் நீங்கி இனத்துடன் வாழ
வழிவகை செய்ய வல்லவனும் வரவில்லை
இப்படியா அப்படியா இதுவா அதுவாவென
துப்பி எறியும் துன்ப நிகழ்வுகளே
ஒப்பிய வாழ்க்கை உயரவும் இல்லை
தப்பான கணக்கைப் போட்டவன் இறைவன்
அல்லல் படுத்தும் அநியாய ஆண்கள்
தொல்லை கொடுக்கும் தாழ்வான செயல்கள்
இடருறும் எல்லாம் இடர்பாடும் தாங்கி
இருந்து தவிக்கும் இருள்நெஞ்ச வாழ்க்கை
வெந்து சாகிறோம் வேண்டாம் தள்ளிவைப்பு
நொந்து கேட்கிறோம் இப்படியரு பிறவிவேண்டாம்
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக