குறள் மொழி இன்பம் 107
நினைத்தொன்று சொல்லாயோ
நெஞ்சே எனைத்தொன்று
மெவ்வநோய் தீர்க்கும் மருந்து
மனதால் விரும்பி
மணமும் முடித்து
இரவும் பகலும்
இணை பிரியாது
இரண்டறக் கலந்து
இன்பத்தில் திளைத்தனர்
சிறப்புடன் என்றும்
சீர்பெற்று வாழ்ந்திட
பொருள் வயின்பால்
புறப்பட்டான் தலைவன்
கடமை எண்ணி
கலக்கம் மறைத்து
இனிதாய் வாழ்த்தி
இணையை அனுப்பினாள்
நாட்கள் கடந்தன
நாயகன் வரவில்லை
காரணம் புரியாது
கவலையில் தோய்ந்தாள்
மண்டிய. காமம்
மனதை வாட்டியது
மோகம் துளைக்க
தேகம் துவண்டது
பணியின் நிமித்தம்
பிரிந்து சென்றவன்
தனிமையில் விட்ட
தலைவியை எண்ணானோ
புத்திக்கு எதுவும்
புலப்பட வில்லை
பித்துப் பிடித்ததுபோல்
பிதற்றி அலைகிறாள்
கண்மை கரைந்திட
கைவளை கழன்றிட
நடை பிணமாகி
நலமும் கெட்டாள்
உடலும் மெலிந்து
உள்ளம் குலைந்தாள்
விரக தாபத்தின்
விரக்தியில் நோகிறாள்
நெஞ்சே சொல்வாய்
வஞ்சியின் மனநோய்க்கு
மருந்தேதும் உண்டா?
உண்டெனில் உரைத்திடுவாயே
சரஸ்வதிராசேந்திரன்
கவிதை சிறுவன்
Saraswathi Rajendran மிகவும் அருமையாக கவிதை எழுதி உள்ளீர்கள் எடுத்தல் தொடுத்தல் முடித்தல் இவ்வாறு கவிதையை கையாண்டு இருக்கும் உங்களது முயற்சி மிகவும் போற்றுதலுக்கு உரியது கடைசி வரியில் நீங்கள் கேட்ட கேள்வி மிகவும் சிறப்பாக இருந்தது தலைவியின் நிலையிலிருந்து எழுதிய கவிதை மிகவும் அருமை கவிதை வாழ்த்துக்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக