வெள்ளி, 30 டிசம்பர், 2016

முத்துகமலம் -15-10-2016

15-10-2016
 என் கதையை வெளியிட்ட முத்துகமலம்திற்கும்என் நன்றிகள்
சிறுகதை
மாற்றம்
சரஸ்வதிராசேந்திரன்
சமையல் வேலைகளை முடித்துவிட்டு வெளியே வந்தபோது குழந்தைகள் இருவரும் ஒற்றுமையாய் விளையாடிக் கொண்டிருந்தது அவள் மனதிற்கு இதமாக இருந்தது.
இவரை ஏன் இன்னமும் காணோம்? இன்றும் குடித்துவிட்டு வருவாரோ ? கவலையாக இருந்தது. அலுவலகம் விட்டு நேரத்தோடு வந்தோமா பிள்ளைகளுடன் சற்று நேரம் உட்கார்ந்து பேசுவோமா என்றெல்லாம் இருப்பதில்லை, வந்ததும் வாட்ஸப்பை பார்த்துகிட்டே இருப்பது... ஒரு தந்தை இப்படி இருந்தால் பிள்ளைகள் எதிர்காலத்தில் எப்படி பொறுப்பானவர்களாய் இருப்பார்கள்? மனதிற்குள கவலையாக இருந்தது.
“உஷா, கார்த்திக் போதும் விளையாட்டு, போய் படிக்கிற வேலையைப் பாருங்க...”
“அம்மா, ப்ளீஸ்... இன்னும் ஆட்டம் முடியலே. சிறிது நேரம் விளையாடிட்டு வரோமே...” கெஞ்சினார்கள்.
“சரி, ஆறு மணியானா முகம் கை கால் கழுவி படிக்க வந்துடணும் சரியா?”
“சரிம்மா” என்று சொல்லி விட்டு அவர்கள் மீண்டும் விளையாட்டில் மூழ்கிப் போனார்கள் .
உடலும் மனமும் சோர்ந்து சோபாவில் அமர்ந்தாள்.
காலிங்பெல் சத்தன் கேட்டு எழுந்துபோனாள்.
விசுவனாதன் வந்தான் கண்கள் சிவக்க...
உள்ளே வந்ததும் வராததுமாக, “லெட்டர் ஏதும் வந்ததா?” என்று கேட்டபடியே வந்தான்.
“ஒண்ணும் வரலீங்க” என்று அவள் சொன்னதையும் அவன் காதில் வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை.
“கீதா டீ போட்டுக் கொண்டா...” என்றபடி அங்கிருந்த சோபாவில் சாய்ந்து கொண்டான்.
அலுவலகத்திற்குப் போய்விட்டு வீட்டிற்கு வந்தால், பாத்ரூமுக்குச் சென்று கை, கால், முகம் கழுவிக் கொண்டு வர வேண்டுமென்கிற வழக்கமெல்லாம் மாறிப் போய்விட்டது. எல்லாம் அந்தக் குடியால் வந்த மாற்றம்.
அவள் சமையற்கட்டுக்குள் போய் டீ போட்டுக் கொண்டு வந்தாள். ஒருதட்டில் பிள்ளைகளுக்காகப்போட்ட வடையை எடுத்து வந்து டீப்பாயில் வைத்துவிட்டு திரும்பினாள்.
இங்கே வா கீதா, நீயும் இங்கே வந்து உட்கார்ந்து வடையைச் சாப்பிடு ‘’என்றான் விசுவனாதன்.
“போதும் உங்க அக்கறை, பேசாமல் சாப்பிடுங்கள்” என்றாள்.
“ஏன் கீதா, உன் மேல் எனக்கு இல்லாத அக்கறை வேறு யாருக்கு இருக்கும்” என்று அவளின் தோள் மீது கை வைத்து அவன் பக்கமாக இழுத்தான்.
“அக்கறை இருக்கிறதால்தான் இப்படிக் குடித்து விட்டு வருகிறீர்களோ?” என்று கோபமாகப் பேசினாள்.
“ஏய், நான்தான் நேற்றே சொன்னேனே... இன்று மானேஜர் பார்ட்டி கொடுக்கப் போகிறார் என்று”
“ஆமாம், தினமும் ஆபீஸில் உள்ள அத்தனை பேரும் பார்ட்டி வைக்கிறார்களா? அப்படியே வைத்தாலும் எனக்குப் பழக்கமில்லை என்று சொல்லி ஒதுங்கி வரவேண்டியதுதானே அதை விட்டுட்டுத் தினமும் குடிப்பதிற்குப் புதுப்புதுக் காரணம் கண்டு பிடித்துச் சொல்லிக்கிட்டு இருக்கிறீர்கள், வளர்ந்த பிள்ளைகளை வைத்துக் கொண்டு... அவர்கள் மேல் அக்கறை இல்லாமல்... இப்படிக் குடித்துக் கொண்டு அலைகிறீர்கள்”
“இப்ப என்ன சொல்றே நீ... என் விஷயத்தில நான் உன்னை தலையிட வேணாமுன்னு எத்தனை தடவை சொல்றது? வர வர உனக்கு நான் ரொம்ப இடம் கொடுத்துட்டேன்னு நினைக்கிறேன்... அதிகமாப் பேச ஆரம்பிச்சுட்டே... நீ எனக்குச் சரிப்பட்டு வர மாட்டே...”
அவன் அப்படிச் சொன்னதும், இதுவரை அமைதியாகப் பேசிக் கொண்டிருந்த கீதாவுக்கு ரோசம் பொங்கியது. இவன் என்ன நம்மைக் கிள்ளுக்கீரைன்னு நினைத்துவிட்டானா?ரொம்பத்தான் வாயை அடைக்கிறான். “இதோ பாருங்க, நானும் பொறுத்துப் பொறுத்துப் போறேன்... இப்படித் தினமும் குடித்து விட்டு வந்தால் நான் மட்டுமில்லை, நம்ம பிள்ளைகளும் உங்களை கேவலமாகத்தான் நினைக்கும். அவர்களுக்கு வழி காட்டியா இருக்க வேண்டிய நீங்களே எதையாவது சாக்கு வைத்துக் குடித்து விட்டு வந்தால்... என்ன சொல்ல முடியும். கொஞ்சமாவது டீஸண்டா இருங்கன்னு சொல்றேன், நல்லபடியா சொன்னா ரொம்பவும்தான் கத்துறீங்களே...” என்று அவளும் எரிந்து விழுந்தாள். “என்னடி உனக்கு வாய் நீளுது... அப்புறம் என் கை நீளும் தெரியுமில்லே...” என்றபடி அவளை அடிக்க எழுந்து வந்தான்.
அதைக் கண்ட கீதா, அவனிடம் ஏதோ சொல்ல நிமிர்ந்தவள் விளையாட்டை நிறுத்திவிட்டுக் குழந்தைகள் இருவரும் தலையைக் குனிந்து கொண்டு பயந்து போய் உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் அமைதியானாள்.
ஒரு கணம் வயிற்றை பிசைந்தது கீதாவிற்கு, ஓ இவர்கள் இன்னும் குழந்தைகள் இல்லை, நன்றாக வளர்ந்து விட்டவர்கள், அவர்கள் மனதில் இந்தச் சண்டை போய் உட்கார்ந்து விடக் கூடாது. வீட்டின் அமைதிக்காகத், தன்னுடைய குழந்தைகளின் நலனுக்காகத் தனக்கு சரியென்று தோன்றுவதைக்கூட சொல்லாமல் மனதிற்குள் அழுத்திக் கொண்டாள்.
அவர் என்று குடிக்க ஆரம்பித்தாரோ, அன்றிலிருந்து அவரின் மூளை தனது செயல்பாட்டைக் குறைத்துக் கொண்டுவிட்டது. சிந்திக்கும் திறன் கொஞ்சம் கூட இல்லாமல் போய்விட்டது. இவர் யோசிக்க மாட்டார், நாம்தான் சிந்திக்க வேண்டும், விட்டுக் கொடுத்துப் போக வேண்டும். நம் பிள்ளைகளின் எதிர்காலம் பாழாகி விடாமல் பாதுகாப்பாய் அமைந்திட இதையும் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான், வேறு வழியில்லை.
முகத்தைச் சாதாரணமாக்கிக் கொண்டு, “சரி சரி கோபப்படாதீர்கள், டீயைக் குடிங்க ஆறிடப்போகுது...” என்று அவனின் கோபத்தை ஆற்ற முயன்றாள்.
“உஷா, கார்த்திக் இரண்டு பேரும் விளையாண்டது போதும், வாங்க படிக்கலாம்” என்று குரல் கொடுத்தபடி அருகிலிருந்த அறைக்குள் சென்றாள்.
அவளது திடீர் மாற்றம் புரியாத விசுவனாதன், “இவளை நம்மை மீற விடக்கூடாது” என்ற கர்வம் மேலோங்க அங்கிருந்து எழுந்து போய் மொபைலில் வாட்ஸ்ஸப்புடன் சேர்ந்து கொண்டான்.
*****
கதை - சிறுகதை | சரஸ்வதிராசேந்திரன் | படைப்பாளர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக