வியாழன், 25 அக்டோபர், 2018

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஆடிமாத்தில் ஆடிப்பூரத்தில் உதித்தவளாம்
சூடிக்கொடுத்த சுடர்க்கொடியான கோதை
மலருக்குள் இருக்கும் மணம் போல
மழலையவள் மனதில்பக்தியும் ஞானமும்
தந்தை விஷ்ணு சித்தரைக் காட்டிலும்
தத்தையவள் விஞ்சி நின்றாள் புலமையில்
நறுமணம் கமழும் மலர்களைக் கொய்து
பொறுமையுடன் எடுத்து மாலை தொடுத்தவள்
அரங்கனின் திருவிளை யாடல்களை தினமும்
அனுபவித்து தந்தை சொல்லச் சொல்ல
கோதையவள் கேட்டு மனதில் அரங்கன் மேல்
காதல் கொண்டு கணவனாகவும் வரித்துக்கொண்டாள்
அரங்கனுக்கு தினமும் கட்டும் மாலையை
அழகான தன்கழுத்தில் அணிந்து அகமகிழளானாள்
அறியாமல் மகள்செய்த தவறைக் கண்டு
அரண்டுபோன விஷ்ணு சித்தர் அரற்றினார்
தெய்வத்துக்குச் சாற்றும் மாலையில் சுத்தம் வேண்டும்
தொன்று தொட்டு வரும் பழக்கம் இது இனி வேண்டாம்
என்று சொல்லி வேறு மாலை கட்டிப்போனார் இறைவனோ
நன்றல்ல இது கோதை சூடிய மாலையைக்கேட்க
பேதளித்து நின்ற விஷ்ணு சித்தர் கலங்கினார்
பேதம் காட்டா இறைவனின் அன்பில் நெகிழ்ந்தார்
அலங்காரம் செய்து மணமகளாய் கொண்டுபோய்
அரங்கனின் சன்னிதானத்தில் விட்டுவிட
ஆண்டவனை காதலித்த கோதையவள்
ஆண்டவனுடனேயே கலந்து விட்டாள்
ஆதரவு தந்தே அரவணைத்துக் கொண்டான்
அரங்கனும் திருப்பாவைச் செல்வியை
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக