புதன், 8 ஜூன், 2016

வல்லமை புகைப்பட போட்டி-66

குடி கார கணவன்
ஒரு புறம்
படிக்கும் பிள்ளைகள்
ஒரு புறம்
வீட்டு வருமானம்
போதாத குறை
ஒருபுறம்
வறுமையை ஓட்ட
வகையாய்தேர்ந்தெடுத்த
வளமான தொழில் இந்த
தொழிலுக்கு
மூலதனம் தேவையில்லை
வேண்டியது உழைப்பே
லட்சியங்கள் எல்லாம்
உயிர்பெறுவது
நடுத்தர வர்க்கத்து
மக்களால்தான்
வீடெல்லாம் பூவாசம்
வறுமைபோக்க
வீட்டு வேலை முடிந்து
பூக்கட்டும் வேலை
தினமும் நூறு ரூபாய்
தினக்கூலி தீர்ந்திடும்
தினப்படி கவலை
ஆனால் பூகட்டும்
பொன்னமாவின் கவலையெல்லாம்
பெண்கள் இன்று
அவிழ்த்த கூந்தலை
முடித்தால்தானே பூவைக்கமுடியும்
பூவைப்பது அநாகரீகமாய்
கருதும் காலமாகிவிட்டது
பூகட்டி வறுமைதீர்த்தகாலமும்
போய் விடும் போலிருக்கிறது
ரிலையன்ஸ் நிறுவனமும்
பூக்களுக்கு வேர்ஹவுஸ்
அமைச்சுட்டால் எங்க பிழைப்பிலே
மண்தான் போங்க (சரஸ்வதிராசேந்திரன்)

பூத் தொழில் புரிவோரின் குடும்பச் சூழலையும் பூத்தொழில் முறையையும் எடுத்துக் காட்டியுள்ளார். பெண்கள் அவிழ்த்த கூந்தலை முடிந்தால் தானே பூ வைக்க முடியும் என்று, இன்று பெண்களிடம் குறைந்து வரும் பூச் சூடும் பழக்கத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் பெண்கள்(,) கூந்தலில் முல்லை மலர்ச் சரத்திற்கு நடுவில் கனகாம்பரத்தை வைத்துக்கொண்டு சென்றது ஒரு காலம். இன்று கனகாம்பரம் என்ற மலரைப் பெண்கள் கூந்தலில் பார்ப்பது அரிதாகிவிட்டது. பூத் தொழிலின் இன்றைய நிலை(,) எதிர்கால நிலைக் குறித்த சிந்தனையையும் எழுப்பி நம் எண்ண அலைகளைக் கீறிவிட்டிருக்கும் சரஸ்வதி ராசேந்திரனின் கவிதையை இந்த வாரச் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுக்கிறோம். கவிஞருக்குப் பாராட்டுகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக