திங்கள், 9 மே, 2016

வல்லமை புகைப்படபோட்டி -62 8-5-2016

 வல்லமை புகைப்பட போட்டி 62ல் என் கவிதையை சிறந்த கவிதையாக தேர்ந்தெடுத்மேகலா ராமமூர்த்திக்கும் வல்லமை குழுவிற்கும் என் மன மார்ந்த நன்றிகள்
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம் என்று குறள் வடித்தார் வள்ளுவப் பேராசான். ஆனால் காலணியின்றித் தம் மெல்லடிகளில் கொப்புளங்கள் வருமளவிற்கு உப்பளங்களில் உழைக்கும் இப்பாவையரின் துயர் நம் கண்களில் நீரை வடியவைக்கின்றது அல்லவா?
நல்குரவென்னும் இடும்பையால் பல்வகைத் துன்பங்களையும் அயராது அனுபவிக்கும் இப்பெண்மணிகளின் வாழ்க்கைத்தரம் உயரவேண்டும்; துன்பங்கள் அவர்தம் வாழ்வினின்றும் கடந்து போகவேண்டும் என்ற நியாயமான எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியிருக்கும் கவிதையொன்று…
ராமன் ஆண்டாலென்ன
ராவணன் ஆண்டாலென்ன
ராப்பகல் பாராமல் காலில்
கொப்பளம் வந்தாலும் பொருட்படுத்தாது
உப்பளத்திலிருந்து உப்பைச் சுமந்து சுமந்து
சுமைதாங்கியாய்ப் போனாலும்
அசரவில்லை என்றும் அதனால்
உசரவும் இல்லை வாழ்க்கைமுறை
இலவசமாய்க் கிடைக்கும் மிக்ஸியும்
இலவசமாய்க் கிடைக்கும் செல்போனும்
இன்னபிற சாமான்களும் வந்து
என்ன உபயோகம்?
அதை இயக்க காசு வேண்டாமா ?
வயிற்றில் ஈரத்துணியை க்கட்டிக்கொண்டு
ஓரமாய் அமர்ந்தால் பசி போகுமா?
பெற்ற பிள்ளைகளுக்குச் சோறு போடுமா இலவசங்கள்?
கற்ற (அரசியல்) வித்தை காட்டி
உற்றவர்களும், உறவுகளும்
உல்லாசத்தை அனுபவிக்க
உழைப்பாளிகள் வெயிலோடும் மழையோடும்
வறுமையோடும் என்று மாறுமோ இந்த நிலை என்று
பொறுமை காக்கின்றனர் இதுவும் கடந்து போகுமென்று!
அரசாங்கம் அளிக்கும் இலவசங்களான மிக்ஸியும், செல்போனும் ஏழைமக்களின் வயிற்றுப்பசிக்கு உணவாகா; உழைப்பு ஒன்றே அவர்களின் பசிப்பணி தீர்க்கும் அருமருந்து என்பதைத் தன் கவிதையில் இயல்பாய் வெளிப்படுத்தியிருக்கும் திருமிகு. சரஸ்வதி ராஜேந்திரன், இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வுபெறுகின்றார். அவருக்கு என் பாராட்டுக்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக