ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

வல்லமை புகைப்படபோட்டி----59


வல்லமை 59வது புகைப்பட போட்டியில் என் கவிதையை சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுத்த மேகலா ராமமூர்த்திக்கும்,வல்லமை குழுவிற்கும் மனமார்ந்த நன்றி
இவ்வாரத்தின் சிறந்த கவிஞர்
வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற வலிநிறைந்த பாடங்கள்தாம் எத்தனை எத்தனை! அதிலொன்று… காதலில் ஏற்படும் தோல்வி. காதலொருவனைக் கைப்பிடித்து அவன் காரியம் யாவினும் கைகொடுக்கக் காரிகையொருத்தி காலம் பார்த்திருக்க, அந்தக் காதலனோ அவளைக் கைகழுவிவிட்டுச் சென்றால் அவள் மனம் சிதறிப் போகாதோ?
சேலையணிந்த சோலையாய்க் காட்சிதரும் பாவையின் காதல் கானல்நீராய்ப் போனதை, ஆசைகள் நீராசையாய் ஆனதைப் பேசும் கவிதை…
அமுதென்று நினைத்து
நஞ்சை அருந்தினேன்
மலரென்று எண்ணி
முட்களைச் சூடினேன்
ஆசை அழைத்த வழி சென்றேன்
நேசமுடன் பேசிய காதலன்
பாதி வழியில் விட்டுப்போனான்
பாழும் மனது குழம்பி, புலம்பிப்
பல நேரங்களில் சஞ்சலித்தது
என் காதல் ஜெயிக்காமல்
போனதற்குக் காரணம் இறைவா நீ
இதோஇந்த அலைகள் ஓடிவந்து
பாறையில் மோதிச் சிதறியதுபோல்
என் ஆசைகளும் சிதறிப்போயின…
கடற்கரையில் ஆரம்பித்த காதல்
கடற்கரையிலேயே கரைந்துபோனது
ஆசையை மட்டும் நம்பிப்போனால் நிலைக்காது வாழ்க்கைப்படகு என்பது புரிந்தது
நான் கவலை மறந்து சிரிக்கிறேன்
கடற்கரையில் நின்று கவிதை பாடுகிறேன்இன்று!
கடற்கரையில் நின்று சோககீதமிசைக்கும் சுந்தரியின் மனத்தைக் கவினுறக் காட்டியிருக்கும் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன், இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வுபெறுகின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக