செவ்வாய், 29 மார்ச், 2016

வல்லமை புகைப்படபோட்டி-56

இயற்கையோடு மனிதன் கைகோத்திருந்த காலத்தில் வானம் பொய்க்கவில்லை; வளம் பிழைக்கவில்லை. இன்றோ, தன்னலத்திலேயே திளைத்துவிட்ட மனிதக்கூட்டம், அமுதனைய மழையையும், வெயிற்கேற்ற நிழலையும், வீசும் தென்றற்காற்றையும் இலவசமாய் அள்ளித்தந்த மரங்களின் அருமை மறந்து அவற்றை வெட்டிவீழ்த்திவிட்டு இயற்கைச்சீற்றங்களாலும், செயற்கை மாசுகளாலும் அல்லலுறுகின்றது.
நம் மண்ணின்மைந்தர்கள் வேரிலே வெந்நீரைப் பாய்ச்சிவிட்டு, இலையிலே பசுமைதேடும் மடமையை இனியேனும் ஒழித்து மரங்களை நடுதல் நன்று! என்று புகல்கின்ற கவிதையொன்று கருத்தைக் கவர்கின்றது!
செத்த பின்
சிந்து பாடும்
செந்தமிழ் நாட்டின்
வாரிசுகள் நாம்
காடுகளை
அழித்துவிட்டு
மழைக்குத் தவம்
இருக்கும்
மண்ணின் மைந்தர்கள் நாம்
வேரிலே
வெந்நீர் ஊற்றிவிட்டு
இலையிலே
பசுமைதேடும்
பகுத்தறிவுவாதிகள் நாம்
அவசியங்களை
அலட்சியப்படுத்திவிட்டு
அவதிப்படும்
அறிவிலிகள் நாம்
போதும் போதும்
இனியொரு விதி செய்வோம்
இந்த ஜெகத்தினை
வளமாக்குவோம்
வா நண்பா வா
காக்கின்ற இயற்கையைக் காப்போம்
கேடுசெய்யும் மாசுகளைத் தவிர்ப்போம்
மழைதரும் மரம் நிறைய வளர்ப்போம்
முன்னோர் செய்த தவறுதவிர்ப்போம்
அப்துல் கலாம் தோன்றிய நாடு
அவர் வகுத்த பாதையில் மரம் நடு!
”காடுவாழவும், கேடுவீழவும் இன்றே வளர்ப்போம் மரங்களை!” என முழங்கும் திருமிகு. சரஸ்வதி ராஜேந்திரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவிக்கின்றேன்.----மேகலாராமமூர்த்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக