ஞாயிறு, 27 டிசம்பர், 2015

வல்லமை புகைப் பட போட்டி--44

’பொக்கைவாய்ச் சிரிப்புடன் ஞானச்சுடரேற்றும் இக்குழந்தை இறைவனின் அருட்கொடையே!’ என்று இன்மொழி பகர்கின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.---மேகலா ராம மூர்த்தி
பொக்கை வாய் சிரிப்புடன்
புதுக்கவிதையாய் புறப்பட்டு
கள்ளங் கபடமின்றி என் செல்லம்
தப்புத்தாளங்களில் வாசித்தாலும்
ஏதோ ஞானச்சுடரென்றோ
என்முன் விரிந்து தெரிகிறது
நல்ல பண்புகள் ஓடி விட்ட காலத்தில்
தீமைகள் ஆட்டம் போடும் உலகத்தில்
மெல்ல தமிழ் ஊட்டி உன்
அருளால் அறிவை ஊட்டி
நாவும் கையும் நல்லனவற்றில்
துலங்கச் செய்த இறைவா நீ
ஈந்த இந்த அருட்கொடைக்கே
இனிதாய் சொன்னேன் நன்றியே

புதன், 23 டிசம்பர், 2015

வல்லமை படக்கவிதைப் போட்டி 43

இயற்கைப் பேரிடரின் கோரக்கரங்களில் தஞ்சமடைந்த இந்தப் பிஞ்சுகளை, இரக்கமெனும் இனியகுணத்தால் அணைத்துநிற்கும் ஏழைமனிதனிவன்!’ என்று மனம்பூரிக்கின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.
இயற்கை விதைத்த
வஞ்சத்தில் பெற்றமகனின்
உயிர் இழந்தான்
உடமை இழந்தான்
எஞ்சியதுஅவன்உயிர் மட்டுமே
கஞ்சிக்கே வழியில்லாதபோது
பிஞ்சுகள் இரண்டு வெள்ளத்தில்
தஞ்சம் ஆகின அவனிடத்தில்
பஞ்சப் பராரியான அவனோ
அஞ்ச வில்லை அள்ளியெடுத்து
கொஞ்சி மகிழ்ந்து நெஞ்சோடுஅணைத்து
பிஞ்சுகள் இரண்டும்
பஞ்சாகவும்
நஞ்சாகவும் கீழ்மைபடாமல் வளர்க்க
நெஞ்சு நிமிர்த்தி நடந்தான்
ஈரமான ஏழை மனிதன்
வெள்ளச்சேதத்தில் செழித்து வளர்ந்தது
மனிதாபிமானம்.

ஞாயிறு, 13 டிசம்பர், 2015

வல்லமை புகைப்பட போட்டி--42


தன் இறப்பின்மூலம் முதலாளிக்கு ’நிவாரணம்’ தரும் ஆட்டுக்குட்டி, தன் தாய்க்குத் தருவதென்னவோ ஆறாத ’ரணம்’ ஒன்றைத்தானே?’ என்ற உண்மையை உரைக்கின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்



நரக நெருப்பில் வீழ்ந்தேனே !
மறந்திருந்த துக்கத்தை
மறக்கவொட்டாமல் செய்கிறதே
வளர்த்த மேய்ச்சல் காரன்
வரைந்து வைத்தான் சோகத்தில்
அச்சுஅசலா என் மகள்படத்தை
ஊரு பக்கம் பேய் மழையாம்
ஊதகாத்து வேறு வீசுதாம்
ஆத்துப் பக்கம் வெள்ளம் வருதாம்
ஒத்தையிலே போகாதேன்னு
தலை தலையா அடிச்சுகிட்டேன்
தங்க மகள் கேட்காம போய்
தண்ணியோட போயிட்டாளே !
மேட்டுமேலே நின்னு மகள்
போறதை வேடிக்கை பார்க்க
மட்டும்தானே முடிஞ்சுது
மேய்ப்பவன் குடும்பத்தை பார்ப்பானா
தண்ணியிலே போற உன்னை மீட்பானா?
மகளே உன்னை மறக்க முடியாம
இந்த படத்தை நுகர்ந்து நுகர்ந்து
விழியிலே நீர் ஓடி நரக நெருப்பில்
நாளும் வீழ்கிறேனே !என் மகளே
சரஸ்வதிராசேந்திரன்

சரஸ்வதிராசேந்திரன்
saraswathiRjendran wrote on 12 December, 2015, 15:29பிரிய மகனே !
நானோ உன்னை காணாத
துயர வெள்ளத்தில்
முதலாளியோ வெள்ள
நிவாரணமாய் ஆட்டுக்கு
மூவாயிர்ம் கிடைக்கும் என்ற
மகிழ்வில் ! ஆம் அவனுக்கென்ன?
தழை பறித்துப்போடுபவனும் அவந்தான்
தலையை வெட்டி காசு பார்ப்பவனும் அவந்தான்
செத்து கொடுத்தாய் வளர்த்தவனுக்கு சொத்து
பெத்தவளுக்கு தீரா துயர்தான் கொடுத்தாய்
நில்லாத என் கண்ணிரால்உன் முகம்
வருடி வருடி உன் நினைவை காக்கின்றேன்
என்னிடம் திரும்பி வருவாயே என் மகனே
சரஸ்வதி ராசேந்திரன்

ஞாயிறு, 6 டிசம்பர், 2015

வல்லமை புகைப்பட போட்டி--41

துள்ளியோடும் இந்த பரதவச் சிறுவர்கள், மல்லிகையினும் மணமுடைய மனோரஞ்சிதங்கள்! மழைவெள்ளத்தில் சிக்கிய மக்களைக் காத்துநிற்கும் தேவதூதர்கள்! வாடிநிற்போரைத் தேடிஉதவும் விடிவெள்ளிகள்!” என்று புகைப்படச் சிறார்களுக்குப் புகழ்மாலை சூட்டியுள்ளார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.  
இந்த சிறுவர்களுக்கு
விளையாட்டு மைதானமும்
வாழ்க்கையுமே கடல்தான்!
இவர்களின் பெற்றோர்கள்
கடலுக்குள் சென்றால்தான்
இவர்களின் பசியும் பட்டினியும்
போகும் நிலை
இவர்கள் தந்தச் சிற்பங்கள் அல்ல
இவர்கள் அழகான கிளிஞ்சல்கள்!
சக மனிதர்களின் துன்பம் கண்டு
வேகமாய் ஓடித் தங்களால்
முடிந்தவரை வெள்ளத்தில் நீந்தி
கரை சேர்க்கும் மனித நேயம்
கொண்டவர்கள்!
மல்லிகையை விட மணமுள்ள
மானோ ரஞ்சிதங்கள்!
செந்தாமரையைக் காட்டிலும்
அழகான, உணர்ச்சிகளும்
கொண்ட சிறுவர்கள்!
இவர்கள் மீனவர்கள் அல்ல…
மீட்பவர்கள் தேவதூதர்கள்!
சென்னை வெள்ளத்தில்
தன்னை இணைத்துக்கொண்ட
தன்னலமற்ற நாளைய விடிவெள்ளிகள்!
 
உள்ளந்தொடும் இக்கவிதையைப் பாராட்டுக்குரியதாய் அறிவிக்கின்றேன்.
பங்குபெற்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் நன்றியும் பாராட்டும்!